‘தனிமனித விருப்பம் மிக உன்னதமானதாக இருந்தாலும்கூட
அது - மக்களுக்கானதாக இல்லாத போதும்,
செயல்பாட்டிற்கு சாத்தியமற்றதாக இருக்கும்போதும்
வரலாறு அதனை நிராகரிக்கும்’
2009 ஜனவரி புதிய பயணம் இதழில் கவிஞர் இன்குலாப்பின் நேர்காணல் ஒன்று உள்ளது.
1965 ல் இந்தி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் நினைவுகளாக இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற முன்னுரையுடன் உள்ளது அந்த நேர்காணல்.
1963 முதல் 1965 வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றாலும் 1965 ஜனவரியில் இந்தி ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து மதுரைப் பகுதியில் மையம் கொண்ட மாணவர்கள் போரட்டத்தை மையம் கொண்டதாக உள்ளது இன்குலாப் நேர்காணலின் முதல் பகுதி. 1965 ஜனவரி 26 குடியரசு நாளில் மாணவர்கள் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு உணர்வூட்டுவதற்காக, வலு சேர்ப்பதற்காக, மாணவர்களை கிர்ச்சியடையச் செய்வதற்காக இப்படி ஏதோ ஒரு (சுயநலமற்ற) காரணத்திற்காக அதற்கு முதல் நாள் ஜனவரி 25ல் மாணவர்கள் காமராசனும், காளிமுத்துவும் சட்டப்பிரிவை எரித்து கைதாகிறார்கள். இந்தச் செய்தியை மதுரை முழுக்க பரப்பினால்தான் கைதானதற்கான நோக்கம் நிறைவேறும். துண்டறிக்கை விநியோகப் பொறுப்பு சாகுல் ஹமீதிடன் (இன்குலாப்பிடம்) தரப்படுகிறது. துண்டறிக்கை விநியோகச் செயல்திறன் பார்த்து, ஆச்சர்யப் பட்டு ‘இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தான் அப்படீன்னு பயந்தான்’ என்று சொல்கிறார். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. இன்றுவரை நம்ம மக்களுக்கு முதலாளித்துவ ஊடகங்களின் புண்ணியத்தில், நக்சல்பாரி என்றால் என்ன என்றே சரியாகத் தெரியாது. 1965லேயே நக்சல்பாரி பற்றி பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் யாராவது ஒரு அறிவாளி சொல்லியிருக்கலாம் என சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்தால் சிரித்துச் சிரித்து குமட்டல்தான் வருகிறது.
‘வசந்தத்தின் இடி முழக்கம்’ எனச் சீன வானொலியால் புகழ்ந்துரைக்கப்பட்ட நக்சல்பாரி (கிராமத்தில் கூடிய விவசாயத் தொழிலாளர்களின்) எழுச்சி நடந்தது 1967ல். நம்ம சாகுல்ஹமீதைப் பார்த்து யாரோ நக்சல்பாரி என்று ஆச்சரியப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 1965ல். இன்குலாப் (புரட்சி) என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சும்மாவா? இல்லையென்றால் இப்படி இருக்கலாம். நம்ம ‘புரட்சி’ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே யாரோ ஒருத்தர் ‘நக்சல்பாரி’ன்னு சொல்லிட்டாரு. அதனால நாமெல்லாம் ‘நக்சல்பாரி’ கிராமத்துலதான் கூடவேண்டும் என்று சாரு மஜூம்தார் தலைமையில தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 1967க்குப் பிறகே மாவோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 1968 ல் ‘புதிய தலைமுறை’ பத்திரிகை தொடங்கி 1970 வரை தொடர்ந்து நடத்திய எஸ்.வி.ஆர்., எஸ்.என்.நாகராஜன், புலவர் ஆதி, கோவை கி.பழனிச்சாமி (கோவை ஞானி) இவர்களையெல்லாம் கூட யாரும் இவ்வளவு முன்னதாக ‘நக்சல்பாரி’ என அடையளம் காட்டவில்லை. நக்சல்பாரி வழிவந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பண்பாட்டு இதழான ‘புதிய மனிதன்’ பத்திரிகையில் சிறப்பாசிரியராக இருக்க முடியாமல் ஓடிவந்த சாகுல்ஹமீதைப் பார்த்து நக்சல்பாரி எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, நக்சல்பாரி என அடையாளம் காட்டியிருக்கிறார்கள். சரி ‘நக்சல்பாரியின் முன்னோடி’ என சாகுல் ஹமீதுக்குப் பட்டம் கொடுப்போம். அவர் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். பிறகு யாராவது ஏதாவது சொன்னால் திருப்பிக் கொடுத்து விடுவார். அவர் உணரும்வரை பொறுத்திருப்போம். அதுவரை நாம் அவரை ‘நக்சல்பாரியின் முன்னோடி’ என்போம்.
இனி... இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்திய முன்னோடிகளில் ஒருவரான சாகுல் ஹமீதுக்கு அடுத்த ஆண்டிலேயே (படித்து முடித்ததுமே) சென்னையில் வேலை கிடைத்து விட்டது. ஆனால், மாணவர்களின் இந்தப் பேரணியை வழிநடத்திய, போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இவர்களின் பேராசிரியர் இலக்குவனாரின் ஆசிரியப் பணியை காங்கிரசின் பக்தவச்சலம் அரசு பறித்துக் கொண்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஆறுமாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஆட்சி மாறி முதலமைச்சரான அண்ணாதுரையின் தனிப்பட்ட முயற்சியில் சென்னை மாநிலக் (அரசு) கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். இலக்குவனார் ஓய்வு பெற்ற போது அவருடைய பணிப்பதிவேட்டைக் காணவில்லை என்று சொல்லி அவருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. காணமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் என்பது அன்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழ் வித்தகர் கலைஞர் இம்மாதம் (ஜூலை 2009) பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கப் பெற்று, விரைவில் திரைக்கு வந்து மாவட்டம், வட்டம் என தலைக்கு இத்தனை டிக்கெட் வாங்கி குறைந்தது 25 நாட்கள் ஓட்ட வேண்டும் என கட்டடையிடப்பட உள்ள ஒரு உன்னத திரைக்காவியத்தை எழுத்தோவியமாக ஒரு வார இதழில் வடித்து தமிழுக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருந்தார். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் அதன் சாரம் குறையாமல் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை, தமிழினத்தின் பெருமையை உலகுக்குணர்த்திய இலக்குவனார் போன்ற சாமானியத் தமிழனுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான அற்பப் பணிகளில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அரசியல் மாற்றங்களால் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். இலக்குவனாரின் ஓய்வூதிய விபரம் அறிந்து, ஒரு தனி அலுவலரை நியமித்து, புதிதாக பணிப்பதிவேட்டை விசாரணைகளின் அடிப்படையில் உருவாக்கி ஓய்வூதியம் பெற்றுத் தர முயற்சித்தார். இதற்குள் இலக்குவனார் இறந்தும் போனார். பின்னர் அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதிய நிலுவையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இத்தனை அவமானங்களையும், இன்னல்களையும் இலக்குவனார் அடைந்ததற்குக் காரணம் அவரது தமிழ்ப்பற்றும், 1965 போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடும்.
இலக்குவனாரைப் போல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். போராட்டத்தின்போது ஒரு துளியினும் சிறிதான பங்களிப்பாற்றி அந்தப் பங்களிப்பினையே காரணமாக்கி பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகம். இடதுசாரி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டாம் கட்டமாகத் திரும்புகின்ற பேச்சு ஏன் ‘புதிய தலைமுறை’ பற்றிப் பேசவில்லை. இன்குலாப் சிறப்பாசிரியராக இருந்த ‘புதிய மனிதன்’ இருந்த திசைக்குக்கூட பேச்சு வரவில்லை.
நேர்காணல் அதன் திசையில் சென்று கொண்டிருந்தது. இன்குலாப்பிற்கு வயதாகி விட்டது. உடல்நலக் குறைவு வேறு. அதனால் நிறைய மறந்திருக்கலாம். மாற்றிச் சொல்லியிருக்கலாம். சரி. அப்படி இருந்தாலும்கூட இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியது நேர்கண்ட பாட்டாளி, மேரி, வைகை வசந்தன் ஆகியோரது கடமை அல்லவா... எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது...? ஆம் சரியாகத்தான் இருக்கிறது.
‘பேசப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படும் அரசியல்
பேசப்படாத வார்த்தைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது’
- இந்து 21/07/2009
Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts
Tuesday, July 21, 2009
Subscribe to:
Posts (Atom)